முதியோர்கள் கொடுத்து அனுப்பும் கடிதத்தை ஏற்க மறுப்பு: உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்கள்


முதியோர்கள் கொடுத்து அனுப்பும் கடிதத்தை ஏற்க மறுப்பு: உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்கள்
x
தினத்தந்தி 20 Aug 2021 1:26 PM IST (Updated: 20 Aug 2021 1:26 PM IST)
t-max-icont-min-icon

முதியோர்கள் கொடுத்து அனுப்பும் கடிதத்தை ஏற்க மறுத்து ரேஷன் பொருட்கள் வழங்காமல் உணவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை ரேஷன் கடை ஊழியர்கள் அலட்சியப் படுத்துகிறார்கள்.

கைவிரல் ரேகை சிக்கல்
தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்தியது.இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகை பதிவு மூலம் தான் ரேஷன் பொருட்களை பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது. ஆனால் பல ரேஷன் கடைகளில் கை விரல் ரேகை பதிவு முறையாக பதிவாகாததால் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும் கொரோனா சூழலால் வயதானவர்களால் கூட்ட நெரிசலில், வரிசையில் நின்று பொருட்கள் வாங்க முடியாத நிலையும் இருக்கிறது.

சட்டமன்றத்தில் அறிவிப்பு
இப்பிரச்சினை குறித்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த 16-ந்தேதி பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் (குளச்சல் தொகுதி), ‘அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தற்போது உள்ள கைரேகை வைக்கும் முறையை மாற்ற வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ‘ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 5 வயதுக்கு மேல் யார் வேண்டும் என்றாலும் சென்று பொருட்கள் வாங்கலாம். வயதானவர்களாக இருந்தால் கடிதம் கொடுத்து அனுப்பினால் போதும், அவர்களிடமே பொருட்கள் வழங்கப்படும்’ என்று அறிவிப்பு வெளியிட்டார்.

முதியோர்கள் மகிழ்ச்சி
தள்ளாத வயதில் ரேஷன் கடைக்கு சென்று கால்கடுக்க காத்திருந்து பொருட்கள் வாங்கி வந்த முதியோர்களுக்கு அமைச்சரின் இந்த அறிவிப்பு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து 60 வயதை கடந்த முதியோர்கள் தங்களது உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடிதம் கொடுத்து அனுப்பி ரேஷன் பொருட்களை எளிதாக வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணினர். ஆனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் அமைச்சரின் இந்த அறிவிப்பை ரேஷன் கடை ஊழியர்கள் நடைமுறைப்படுத்தவில்லை.எடுத்துக்காட்டாக திருவான்மியூர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியர், தங்கள் வீட்டில் வேலைபார்க்கும் இளைஞரிடம் கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தனர். அந்த வாலிபர் திருவான்மியூரில் உள்ள டி.யூ.சி.எஸ். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்குட்பட்ட குறியீடு எண்-100-52 என்ற ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அங்கு அவர், வயதான தம்பதியினரின் ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் அவர்களது பரிந்துரை கடிதத்தை காண்பித்து பொருட்கள் கேட்டார். ரேஷன் கடை ஊழியர் எடுத்த எடுப்பிலே, இதற்கு எல்லாம் பொருட்கள் வழங்க முடியாது. மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு சென்று அவர்கள் கையெழுத்திட்டு கடிதத்தை கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

அலைக்கழிப்பு
வயதானவர்களால் வீட்டின் அருகே இருக்கும் ரேஷன் கடைக்கே சென்று வரமுடியாது என்ற கஷ்டத்தை உணர்ந்துதான் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ஆனால் மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அலைக்கழிப்பது சரிதானா? என்ற வேதனையுடன் அந்த வாலிபர் புறப்பட்டு சென்றார்.தங்கள் நலனில் அக்கறையுடன் அமைச்சர் அறிவித்த அறிவிப்பை ரேஷன் கடை ஊழியர்கள் கடைபிடிக்காமல் அலட்சியப்படுத்துவது முதியோர்களை கவலை அடைய செய்துள்ளது. எனவே அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடை ஊழியர்களுக்கு தெளிவான உத்தரவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நிர்ப்பந்தம்
இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, பருப்பு, பாமாயில் வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு செல்லும் ஏழை-எளிய மக்களிடம் டீ தூள், துணி சோப்பு, ரவை, கோதுமை-மைதா மாவு பாக்கெட், கடுகு, வெந்தயம் போன்ற பொருட்களில் எதையாவது கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வருகிறார்கள். இலவச அரிசி, மானிய விலை பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ? என்ற அச்சத்தில் மக்களும் வேறு வழியின்றி ரேஷன் கடை ஊழியர்களிடம் அந்த பொருட்களை வாங்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

முறையான ரசீது...
ரேஷன் பொருட்கள் வாங்கியதற்காக தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் அனுப்பப்படும் குறுந்தகவல் ரசீதில், இந்த பொருட்கள் விவரம் இடம்பெறுவது இல்லை. ஆனால் ரசீதில் வரும் பணத்தைவிட இரு மடங்கு வசூலிக்கப்படுகிறது. ரேஷன் கடைக்கு வரும் பாமர மக்களிடம் கூடுதல் பொருட்கள் வாங்க நிர்ப்பந்திக்கக்கூடாது. அதே நேரத்தில் கூடுதல் பொருட்கள் வாங்குவோர்களிடம் அதற்குரிய முறையான ரசீது வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story