குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
சென்னை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. பழைய குடியிருப்பில் ஏற்கனவே வசித்து வந்த 300 பயனாளிகளுக்கு இந்த புதிய வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் எனவும், மத்திய, மாநில அரசுகளின் மானியம் போக மீதமுள்ள ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பயனாளிகள் செலுத்தவேண்டும் எனவும் குடிசை மாற்று வாரியம் அறிவித்து உள்ளது. ஆனால் ஏற்கனவே பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த தாங்கள், எதற்காக பணம் செலுத்த வேண்டும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் மனு அளிக்க முயன்றனர். ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து அங்குவந்த வியாசர்பாடி போலீசார், பொதுமக்களிடம் சமரசம் பேசினர். இதுபற்றி அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story