தேவாரத்தில் தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் யானை
தேவாரத்தில் தனியார் தோட்டத்தில் பெண் யானை இறந்து கிடந்தது.
தேவாரம்:
தேனி மாவட்டம் தேவாரத்தில் கடந்த சில வருடங்களாக ஒற்றை காட்டு யானை விவசாய பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது. மேலும் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் மற்றும் தோட்ட காவலாளிகள் உள்பட 13 பேரைஅடித்து கொன்றுள்ளது.
எனவே ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் இரவு பகலாக ரோந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை, தேவாரம் தாழையூத்து மலையடிவாரத்தில் முத்துப்பாண்டி என்பவரது தோட்டத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதனால் இறந்தது ஒற்றை காட்டு யானையாக இருக்கலாம் என்று விவசாயிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து உத்தமபாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தது 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்றும், விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேவாரம் கால்நடைத்துறை அதிகாரிகள் குழுவினர் அங்கு வந்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், உடல்நலக்குறைவால் யானை இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, யானை எப்படி இறந்தது என்பது குறித்து தெரியவரும் என்றனர். பின்னர் அந்த யானை அங்கேயே புதைக்கப்பட்டது.
Related Tags :
Next Story