பூட்டிய கோவில்கள் முன்பு தாலிகட்டி திருமணம் செய்த மணமக்கள்


பூட்டிய கோவில்கள் முன்பு தாலிகட்டி திருமணம் செய்த மணமக்கள்
x
தினத்தந்தி 20 Aug 2021 9:24 PM IST (Updated: 20 Aug 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களில் பூட்டிய கோவில்கள் முன்பு மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திண்டுக்கல்: 

3 நாட்கள் தடை
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வழிபாட்டு தலங்களை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நேற்று மூடப்பட்டன.


ஆவணி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் நேற்று கோவில்கள் முன்பு பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கோவில்கள் முன்பு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர். 
இதேபோல் கோவில்களில் திருமணம் நடத்த பதிவு செய்திருந்தவர்களும் நேற்று கோவில்கள் மூடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் திருமண மண்டபங்களில் யாகம் நடத்தி திருமண சடங்குகளை நிறைவேற்றினர்.

கோவில்கள் முன்பு தாலிகட்டி...
ஒருசிலர் கோவில்கள் முன்பு தாலிகட்டி எளிமையான முறையில் திருமணம் நடத்தினர். அந்த வகையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில் ஆகிய கோவில்கள் முன்பு நேற்று 5 திருமணங்கள் நடந்தது. மணமக்கள் கோவில் நுழைவு வாயில் முன்பு தாலிகட்டிக்கொண்டனர். 


பூட்டப்பட்ட கோவில்கள் முன்பு எந்தவித திருமண சடங்குகள் இன்றி திருமணம் நடந்ததை பார்த்த பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள போதிலும் டாஸ்மாக் கடைகள் தினமும் திறக்கப்படுகிறது. ஆனால் கோவில்களை மட்டும் வாரத்தில் 3 நாட்கள் பூட்டிவிடுகின்றனர். 


இதன் காரணமாகவே கோவில்களில் வேத மந்திரங்கள் முழங்க உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக நடக்க வேண்டிய திருமணங்கள் மிகவும் எளிமையாக நடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கோவில்களில் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.

பழனி
இதேபோல் பழனி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களும் அரசு உத்தரவின்படி பூட்டப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இந்தநிலையில் நேற்று ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தநாள் என்பதால் பழனி பகுதியில் திருமணம், காதுகுத்து, கடைதிறப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

குறிப்பாக பழனி பகுதியில் உள்ள பூட்டிய கோவில்கள் முன்பு ஏராளமான திருமணங்கள் எளிமையான முறையில் நடைபெற்றது. அதில் குறைந்த எண்ணிக்கையில் மணமக்களின் உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

Next Story