வரலட்சுமி நோன்பு வீடுகளில் பெண்கள் சிறப்பு பூஜை
வரலட்சுமி நோன்பையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி:
வரலட்சுநோன்பையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
வரலட்சுமி நோன்பு
ஆவணி மாத பவுர்ணமி நாளுக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. நீண்ட ஆயுள், செல்வம், உடல் நலம் வேண்டி வரலட்சுமி விரதம் இருந்து வழிபடும் நாளை வரலட்சுமி நோன்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று வரலட்சுமி நோன்பு கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் வீடுகளை அலங்கரித்து நோன்பு கயிறு கட்டி விரதத்தை தொடங்கினார்கள். பூஜை அறையில் கோலமிட்டு, அம்மனை வரவேற்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் கோவில்களுக்கு சென்று வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பெண்கள் நேற்று வரலட்சுமி பூஜையை தங்கள் வீடுகளிலேயே செய்தனர். நெய் விளக்கேற்றி அவர்கள் வழிபட்டனர். மேலும் வீடுகளுக்கு வந்த பெண்களுக்கு வளையல்கள், இனிப்புகள் வழங்கினர்.
ஓசூர்
கர்நாடக-ஆந்திர எல்லையில் உள்ள ஓசூர், சூளகிரி, பேரிகை, பாகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வரலட்சுமி விரதத்தையொட்டி பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு கோலமிட்டு, வாழைக்கன்று மற்றும் மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்தினர். மேலும் அறையை மலர்களால் அலங்கரித்து, வெள்ளியிலான லட்சுமி முக பொம்மையை வைத்து பெண்கள் விரதமிருந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பின்னர் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து மஞ்சள், குங்குமம், தாம்பூல பொருட்கள் வழங்கி மகிழ்ந்தனர். ஓசூர் பகுதியில் வரலட்சுமி விரதத்தையொட்டி, வீடுகளில் இனிப்பு செய்து சாமிக்கு படைத்து, பின்பு உறவினர்கள், நண்பர்கள், அக்கம், பக்கத்தினருக்கு வழங்கினர்.
தேன்கனிக்கோட்டை
இதேபோல் வரலட்சுமி விரதத்தையொட்டி தேன்கனிக்கோட்டை பகுதியில் பெண்கள் விரதமிருந்து வீடுகளில் வரலட்சுமி, அம்மன் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கி விரதத்தை முடித்து கொண்டனர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரலட்சுமி நோன்பையொட்டி பெண்கள் வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story