மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கக்கோரி தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூரில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்தது


மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கக்கோரி   தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூரில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 20 Aug 2021 10:12 PM IST (Updated: 20 Aug 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி நேற்று ஓசூரில் மாநகர், மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர்:
கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி நேற்று ஓசூரில் மாநகர், மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
 கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி நேற்று ஓசூரில் மாநகர், மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர்- ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பரசன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி வரவேற்றார். 
 இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது கூறியதாவது:- 
 தே.மு.தி.க. இன்று மக்கள் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. தே.மு.தி.க.வை பொறுத்தவரை, மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும், முதலில் களம் கண்டு, பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை நிச்சயம் துணை நிற்கும். தமிழகம் ஏற்கனவே தண்ணீர் இன்றி வறண்ட பூமியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகம் நிச்சயமாக பாலைவனமாக மாறிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. 
எச்சரிக்கை
 காவிரியை நம்பித்தான் தமிழ்நாடு உள்ளது. மேகதாதுவில் இருந்து தண்ணீர் வந்தால் தான், திருச்சி, தஞ்சை, நாகை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் தன்னிறைவு பெற்று கடைக்கோடி வரை தண்ணீர் போய் சேரும். எனவே கர்நாடக அரசு கண்டிப்பாக மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை தே.மு.தி.க. வலியுறுத்துகிறது. இந்தியாவிற்கே சோறு போடும் பூமியாக தஞ்சை திகழ்கிறது. அந்த தஞ்சைக்கே தண்ணீர் வரவில்லை என்றால், விவசாயமே மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். 
 ஏற்கனவே விவசாயிகள் பலவிதத்தில் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளார்கள். இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகம் வறண்ட பூமியாகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று சவால் விடுகிறார். அவருக்கு தமிழக மக்கள் சார்பில் ஒரு வேண்டுகோளை எச்சரிக்கையாக விடுக்கிறோம். நாங்கள் தமிழக-கர்நாடக எல்லை வரை வந்துவிட்டோம். ஒட்டுமொத்த சக்தியை திரட்டி, கர்நாடகவிற்குள் நுழைவதற்கு நீண்ட நேரம் ஆகாது. 
 நிறுத்த வேண்டும்
 ஆனால், நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வருகிறோம். மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் நமக்குள் எந்த பிரிவினையும் வரவேண்டாம் என்பதை தமிழக மக்கள் சார்பாகவும், விவசாயிகள் சார்பிலும் தெரிவித்து கொள்கிறோம். பிரதமரும், தமிழக முதல்வரும் உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, 2 மாநிலங்களுக்கு இடையே எந்தவித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்றால், மேகதாதுவில் அணை கட்டுவதை உறுதியாக நிறுத்த வேண்டும். 
 உச்சநீதிமன்றம் மற்றும் பிரதமரின் அறிவுரைப்படி கர்நாடக அரசு, உடனடியாக மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும். இந்திய நதிகளை உடனடியாக இணைத்து, நதிநீரை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருக்க வேண்டும். நதிகள் இணைப்பை சாத்தியப்படுத்த வேண்டும். நதிகள் இணைக்கப்பட்டால் தான் மாநிலங்களுக்குள் பிரிவினைகளோ, மோதல்களோ ஏற்படாது. 
நாங்கள் தடுப்போம்
 கர்நாடக அரசே, தமிழக மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா? அல்லது சுபாஷ் சந்திரபோஸ் ஆக மாற வேண்டுமா?. மேகதாதுவில் நீங்கள் ஒரு செங்கல் கூட வைக்க முடியாத அளவிற்கு நாங்கள் தடுப்போம். காவிரி நமது அன்னை. நமது உரிமை, அதனை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை. 
 இவ்வாறு அவர் பேசினார். 
 இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் பிரபாகரன், கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர். 
முன்னதாக, ஓசூர் போக்குவரத்து பணிமனை அருகிலிருந்து பிரேமலதா விஜயகாந்த் டிராக்டர் ஓட்டிக்கொண்டு, ஆர்ப்பாட்ட மேடை வரை வந்தார்.

Next Story