விசைப்படகு-சுருக்குமடி வலைகள் பறிமுதல்


விசைப்படகு-சுருக்குமடி வலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Aug 2021 10:42 PM IST (Updated: 20 Aug 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதிக்கொண்டதன் எதிரொலியாக விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சீர்காழி:
சீர்காழி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதிக்கொண்டதன்  எதிரொலியாக விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மீனவர்கள் போராட்டம்
தமிழகத்தில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவித்து மீனவர்கள் இரு பிரிவாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி கடலில் மீன் பிடிக்க செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
விசைப்படகால் பைபர் படகு மீது மோதல்
இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவு போலீசார் தடையை மீறி மீன்பிடித்து வரும் படகுகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவு போலீசார் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறி பூம்புகார், திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சேர்ந்த சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்கள் கடந்த 14-ந் தேதி தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 
இதனை அறிந்த வானகிரி மீனவர்கள் அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றனர். தங்களை தடுக்க வருவதை பார்த்த திருமுல்லைவாசல் மீனவர்கள், தங்களின் விசைப்படகால், பைபர் படகின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.
3 மீனவர்கள் படுகாயம்
இதில் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த படகு முற்றிலும் சேதம் அடைந்தது. 
இதனை அறிந்த வானகிரி கிராம மீனவர்கள் தங்களது கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவருக்கு சொந்தமான நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைத்து விட்டு தப்பித்து சென்றனர். இது தொடர்பாக கடலோர காவல் படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர். 
விசைப்படகு-சுருக்குமடி வலைகள் பறிமுதல்
தொடர்ந்து இரு தரப்பு மீனவ கிராமங்களிலும் விசாரணை நடந்து வரும் சூழலில், படகுகள் மோதலுக்கு காரணமான விசைப்படகு மற்றும் அதில் இருந்த வலைகளை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 
தொடர்ந்து சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலமுருகன், ரமேஷ் கிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும், வருவாய்த்துறையினர், மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் மோதலுக்கு காரணமான விசைப்படகு மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்தனர்.
பதற்றம்
இதனால் திருமுல்லைவாசல் கடற்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பறிமுதல் செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 
தொடர்ந்து மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story