திருமணமான 11 மாதங்களில் இளம்பெண் மர்மசாவு: கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் உடலை வாங்க மறுத்ததால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
திருமணமான 11 மாதங்களில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். சாவுக்கு காரணமான கணவரை கைது செய்யக்கோரியும், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை வாங்க மறுத்தும் உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் பாலு (வயது 32). எடைக்கல் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் ராஜலட்சுமி (26) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு ராஜலட்சுமி தனது தம்பி சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டு கணவருடன் ஏற்பட்ட தகராறு குறித்து கூறியதோடு, அவரை உடனடியாக வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து சரவணன் பாலி கிராமத்துக்கு சென்றபோது, ராஜலட்சுமி வீட்டில் மர்மமான முறையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
மேலும் இந்த சம்பவம் குறித்து பெரியசாமி எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் தனது மகள் ராஜலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், எனது மகளை பாலு அடித்துக் கொலை செய்திருக்கலாம் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே உயிரிழந்த ராஜலட்சுமிக்கு திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் அவரது சாவு குறித்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வந்தாா்.
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
இந்த நிலையில் நேற்று மதியம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ராஜலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எடைக்கல் போலீசார், உறவினர்களை அழைத்து ராஜலட்சுமியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
இதைகேட்ட உறவினர்கள் ராஜலட்சுமியின் சாவுக்கு காரணமாக பாலுவை கைது செய்தால், தான் உடலை வாங்குவோம். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என கூறி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு கச்சிராயப்பாளையம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ராஜலட்சுமி உடல் பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்தவுடன், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற உறவினர்கள் ராஜலட்சுமியின் உடலை பெற்றுச் சென்றனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி-கச்சராயபாளையம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story