கொரோனா பரவும் ஆபத்து


கொரோனா பரவும் ஆபத்து
x
தினத்தந்தி 20 Aug 2021 11:09 PM IST (Updated: 20 Aug 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அரசின் தடையை மீறி கோவில்களில் நடந்த ஏராளமான திருமணங்களினால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் அரசின் தடையை மீறி கோவில்களில் நடந்த ஏராளமான திருமணங்களினால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கொரோனா தொற்றை வெகுவாக குறைத்துள்ள நிலையில் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப் படக்கூடாது என்ற எண்ணத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் ஊரடங்கு தளர்வினையொட்டி கோவில்களில் அளவுக்கதிகமாக பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து உருவானதால் அதனை ஆரம்ப நிலையிலேயே கட்டுப் படுத்தும் வகையில் கோவில்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகளை அரசு விதித்துள்ளது. 
குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதித்து உள்ளதோடு அன்றைய நாட்களில் எந்த நிகழ்ச்சிகளும் பக்தர்களை வைத்து நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு நடைசாத்தப்பட்டுவிடும். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. 
திருமணங்கள்
இந்தநிலையில் ராமநாதபுரத்தில் நேற்று ஆவணி மாத முதல் முகூர்த்தம் என்பதால் கோவில்களில் ஏராளமான திரும ணங்கள் நடைபெற்றன. குறிப்பாக ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் அடைக்கப்பட்டு இருந்தபோதிலும் கோவில்முன்பு வைத்து நேற்று காலை முகூர்த்த நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
கோவில் முன்பு மணமக்கள் உறவினர்கள் முன்னிலையில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மாலை மாற்றி தாலிகட்டி திருமணம் செய்துகொண்டனர். இன்னும் சில மணமக்கள் கோவிலுக்குள் சென்று வளாக பகுதியில் வைத்து கூட்டநெரிசலுடன் திருமணம் செய்தனர். 
ஆபத்து

இதனால் அளவுக்கு அதிகமான மக்கள் திரண்ட அந்த பகுதியில் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று திருமண கூட்டங்களை கலைந்து செல்ல வலியுறுத்தி அப்புறப் படுத்தினர். ஒரே நேரத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. இதேபோன்று ராமநாதபுரத்தில் பல கோவில்களில் திருமணங்கள் மக்கள் அதிகஅளவில் கூடி நடைபெற்றது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற கோவில்களில் திருமணங்கள் நடைபெறுவதை தவிர்க்க அந்தந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story