திருக்கோவிலூர் அருகே துணிகரம் கல்லூரியில் ரூ.7¼ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திருக்கோவிலூர் அருகே துணிகரம் கல்லூரியில் ரூ.7¼ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Aug 2021 11:16 PM IST (Updated: 20 Aug 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே கல்லூரியில் ரூ.7¼ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருக்கோவிலூர், 

அலுவலக அறை பூட்டு உடைப்பு 

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 68). கோட்டாட்சியராக இருந்து ஓய்வுபெற்ற இவர், திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நடத்தி வருகிறார். இவர் தனது கல்லூரி அலுவலகத்தில் உள்ள பீரோவில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் 20 பவுன் நகைகளை வைத்திருந்தார். 
நேற்று முன்தினம் மாலை ஊழியர்கள் வழக்கம்போல் கல்லூரியை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவில் கல்லூரி வளாக சுவற்றில் ஏறி உள்ளே குதித்த மர்மநபர்கள், அலுவலக அறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். 

நகை-பணம் கொள்ளை

பின்னர் அவர்கள், அங்கிருந்த பீரோ பூட்டை உடைத்து, அதில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் ஹார்டு டிஸ்கைக்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். பீரோவின் கீழ் பகுதியில் உள்ள ரகசிய அறையில் வைத்திருந்ததால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தப்பியது. 
இதற்கிடையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த ஊழியர்கள், கொள்ளை நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்குராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த அலுவலக அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு 

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதற்காக விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த அலுவலக அறையில் மோப்பமிட்ட அந்த நாய், திருக்கோவிலூர்-விழுப்புரம் பிரதான சாலை வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே விழுப்புரத்தில் வந்த கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த அறையில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். 
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.7¼ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அரகண்டநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story