அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது
கோத்தகிரியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது.
குடியிருப்பு பகுதியில் கரடி
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா அமைந்து உள்ளது. இதனருகில் குமரன் காலனி, கன்னிகா தேவி காலனி உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றன. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளிலும், வளம் மீட்பு பூங்கா வளாகத்திலும் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கரடி ஒன்று உலா வந்தது.
இதனால் பொதுமக்களும், தூய்மை பணியாளர்களும் அச்சமடைந்தனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று வளம் மீட்பு பூங்கா மற்றும் குமரன் காலனிக்கு செல்லும் சாலையோரத்தில் கூண்டு வைக்கப்பட்டது. அதில் பழ வகைகள் வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூண்டில் சிக்கியது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அந்த வழியாக வந்த கரடி பழங்களை தின்ன முயன்றபோது கூண்டில் சிக்கியது. பின்னர் கூண்டில் இருந்து வெளியே வர முடியாமல் ஆக்ரோஷத்துடன் கத்தியது. இந்த சத்தம் கேட்ட பொதுமக்கள் கரடியைக் காண திரண்டு வந்தனர். உடனே கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் கோத்தகிரி வனச்சரகர் சரவணன் உத்தரவின்பேரில் வனவர் தனபால், வனக்காப்பாளர் சிவலிங்கம் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை கூண்டுடன் சரக்கு வாகனத்தில் ஏற்றி, தலைகுந்தா அருகே உள்ள அப்பர் பவானி அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story