பச்சை தேயிலை அறுவடை மும்முரம்


பச்சை தேயிலை அறுவடை மும்முரம்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:32 PM IST (Updated: 20 Aug 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

மகசூல் அதிகரிப்பு

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயமே உள்ளது. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். இதற்கிடையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதுமான மழை பெய்ததாலும், இதமான சீதோஷ்ண காலநிலை உள்ளதாலும் தோட்டங்களில் உள்ள செடிகளில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது.

தற்போது பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சம் 14 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை சற்று குறைவாக இருப்பினும், மகசூல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்து உள்ளனர். இதனால் பச்சை தேயிலை அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எந்திரங்கள் மூலம்...

இந்த நிலையில் பச்சை தேயிலையை பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பச்சை தேயிலையை அறுவடை செய்ய கையால் இயக்கும் எந்திரம், மோட்டார் மூலம் இயங்கும் எந்திரம் போன்ற நவீன எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். பெரிய தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் மோட்டார் மற்றும் காற்றால் இயங்கக்கூடிய அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 300 கிலோ வரை பச்சை தேயிலையை அறுவடை செய்கின்றனர். 

மேலும் சிறு விவசாயிகள் கைகளால் இயக்கும் கத்திரிக்கோல் வடிவிலான எந்திரம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சாதாரணமாக தொழிலாளி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக சுமார் 50 கிலோ பச்சை தேயிலையை பறிக்க முடியும். ஆனால் எந்திரங்கள் மூலமாக அறுவடை செய்யும்போது அதிக அளவில் அறுவடை செய்ய முடிகிறது என்றனர்.


Next Story