வேலிப்பயிராக பனை மரங்களை வளர்க்க தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டல்
வேலிப்பயிராக பனை மரங்களை வளர்க்கலாம் என்று தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
போடிப்பட்டி
வேலிப்பயிராக பனை மரங்களை வளர்க்கலாம் என்று தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
கற்பக விருட்சம்
நமது மாநில மரமாக அடையாளம் காட்டப்பட்டுள்ள பனை மரங்கள் அடி முதல் நுனி வரை பலன்களை தரக்கூடியது. இதனால் தான் பனை மரங்களை கற்பக விருட்சம் என்கிறோம்.ஆனால் காலப்போக்கில் பனை மரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் பனை மரங்களை பாதுகாக்கவும், உருவாக்கவும் அரசு அறிவித்துள்ள திட்டங்கள் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை மரங்களை நடவு செய்யும் திட்டம், பனைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க செய்யும் நடவடிக்கை, ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் பனைமரம் வளர்ப்பு குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கும். அதேநேரத்தில் பனை மரத்தை வைத்தவன் பார்த்ததில்லை என்பார்கள்.பனை மரத்தை நடவு செய்து அதன் பலனை அனுபவிக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.ஆனாலும் நமது ஆயுள் காலத்தை விட பனை மரங்களின் ஆயுள் காலம் அதிகம் என்பதை மறந்துவிடக் கூடாது.
நீர்நிலைகளின் காவலன்
நமது முன்னோர்கள் நீரை சேமிக்க நீர்நிலைகளை உருவாக்கும் போதே நீர் நிலைகளின் காவலனாக பனை மரங்களையும் நியமித்து விட்டார்கள் என்று சொல்லலாம்.ஏனென்றால் ஓங்கி உயர்ந்து வளரும் பனை மரம் தனது வேர்களை அகலமாகப் பரப்பி மண் அரிப்பைத் தடுக்கிறது. இதனால் கனமழை, வெள்ளப் பெருக்கு காலங்களிலும் நீர் நிலைகள் உடைவது தடுக்கப்படுகிறது.மேலும் நமது முன்னோர்கள் ஆலமரத்தையும் பனை மரத்தையும் நீரூற்று மரங்கள் என்று வகைப்படுத்தினார்கள். இவை பூமிக்கடியில் இருக்கும் நீரூற்றுகளை பாதுகாக்கும் என்று நம்பினார்கள். அத்துடன் பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், நுங்கு, குருத்து, கருப்பட்டி, பனங்கற்கண்டு என்று பனை மரங்களிலிருந்து கிடைக்கும் உணவுப் பட்டியல் மிகவும் நீண்டது.இவை சுவையானதாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.ஆனால் படிப்படியாக பனைப் பொருட்களின் பயன்பாடு குறைந்தபோது பனைமரங்களின் தேவையும் குறைந்தது.
சந்தை வாய்ப்புகள்
பொன்முட்டையிடும் வாத்தாக பராமரிக்க வேண்டிய பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு சூளைகளில் எரிபொருளானது. நாகரிக வளர்ச்சியால் ஓலை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றியதால் வசதிகள் அதிகரித்தது. ஆனாலும் அந்த ஆரோக்கியமான குளிர்ந்த சூழலை நாம் தொலைத்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது பனை மரங்களை வளர்ப்பதில் அரசு ஆர்வம் காட்டினாலும் அதிலிருந்து வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தினால் மட்டுமே பனை வளர்ப்பில் முழுமையாக வெற்றியடைய முடியும். அந்தவகையில் பனைப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், பனை ஓலை, நார் போன்றவற்றின் மூலம் பெறப்படும் கைவினைப் பொருட்களுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்குதல் போன்றவை முக்கியத்துவம் பெறுகிறது.
அதேநேரத்தில் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய தட்டுப்பாடு உள்ளது.அதற்கு தீர்வு காணும் வகையில் நவீன மரம் ஏறும் எந்திரங்கள் மற்றும் அதன்மூலம் மரம் ஏறும் பயிற்சிகள் போன்றவை வழங்க வேண்டியது அவசியமாகும்.மேலும் அரசு புறம்போக்கு நிலங்களை வீணாக்காமல் பனை மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கலாம்.
வேலிப்பயிர்
இந்தநிலையில் பராமரிப்பில்லாமல், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பனை மரங்களை வேலிப்பயிராக நடவு செய்து பயன்பெறலாம் என்று தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-
வேலிப்பயிராக பனை மரங்கள் வளர்க்கும் போது மண் அரிப்பு தடுக்கப்பட்டு நிலத்திலுள்ள சத்துக்கள் மழைக்காலத்தில் வழிந்து வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மேலும் சிறந்த காற்று தடுப்பானாக செயல்பட்டு பலத்த காற்று வீசும் காலங்களில் பயிர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கிறது. அத்துடன் பனை மரத்தில் தங்கும் ஆந்தைகள், கழுகுகள் போன்றவை பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் எலிகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பனை மரங்களிலிருந்து கிடைக்கும் ஓலை, சில்லாட்டை போன்றவற்றை மூடாக்காகவும், இயற்கை உரமாகவும் பயன்படுத்திப் பலனடையலாம்.
இதுதவிர அதிக எண்ணிக்கையில் பனை மரங்களை வளர்க்கும் போது நுங்கு, பதநீர், கருப்பட்டி போன்றவற்றின் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும்.எனவே விளைநிலங்களில் வேலிப்பயிராக பனை மரங்களை நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு தோட்டக்கலைத்துறையினர் கூறினர்.தற்போது பனைப் பொருட்களுக்கான மவுசு அதிகரித்துள்ள நிலையில் பனை மரங்களை வளர்ப்பது வருங்காலத்தில் சிறந்த வருவாய் தரக்கூடியதாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
Related Tags :
Next Story