கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி


கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 21 Aug 2021 12:26 AM IST (Updated: 21 Aug 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை, 
ஹெலிகாப்டர் சகோதரர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த சகோதரர்கள் கணேசன் (வயது 50), சுவாமிநாதன் (47). இவர்கள் இருவரும் ஹெலிகாப்டரை அதிகளவில் பயன்படுத்தி வந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர். 
இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மோசடி வழக்கில் கைதான கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 
கொரோனா பரிசோதனை
சமீபத்தில் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்காக அவர்கள் இருவரையும் போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் புதுக்கோட்டை சிறையில் அடைக்க அழைத்து வரப்பட்டனர். அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சுவாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
இதனால் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதி 
இந்த நிலையில் கணேசனுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மோசடி வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story