கட்டிட ஒப்பந்ததாரருக்கான ரூ.2 கோடி நிலுவைத்தொகை நிறுத்தி வைப்பு


கட்டிட ஒப்பந்ததாரருக்கான ரூ.2 கோடி நிலுவைத்தொகை நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 21 Aug 2021 1:38 AM IST (Updated: 21 Aug 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டிட ஒப்பந்ததாரருக்கான ரூ.2 கோடி நிலுவைத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

ஆய்வு
சென்னை புளியந்தோப்பில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகளின் சுற்றுப்புற சுவற்றை அழுத்தினாலே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் பெரம்பலூர் அருகே துறைமங்கலம் பகுதிக்கு உட்பட்ட கவுள்பாளையத்தில் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் தரமற்ற கட்டுமான பணிகளால் சுவற்றில் விரிசல் ஏற்பட்டு வருவதாகவும், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து வருவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் திருச்சி கோட்ட பொறியாளர்கள் குழுவினர் வீடுகளின் கட்டுமான பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிலுவைத்தொகை நிறுத்தி வைப்பு
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மற்றும் பொறியாளர்கள் குழுவினர் கவுள்பாளையத்திற்கு நேரில் சென்று குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, குடியிருப்புவாசிகளிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து செயற்பொறியாளர் அழகு பொன்னையா நிருபர்களிடம் கூறுகையில், கவுள்பாளையம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகளில் வரப்பெற்ற புகாரை தொடர்ந்து, கட்டிட ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட இருந்த ரூ.2 கோடிக்கு மேலான இறுதி நிலுவைத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.
அச்சம் கொள்ள தேவையில்லை
மேலும் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நிருபர்களிடம் கூறுகையில், கவுள்பாளையம் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், ஒரு சில குடியிருப்புகளில் ஆங்காங்கே சிறிய அளவில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்துள்ளதையும், படிக்கட்டுகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்துள்ளதையும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் சுவற்றின் வெளிப்புறப்பூச்சுகளையும் உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. குடியிருப்பு கட்டிடங்கள் உறுதியாக உள்ளதால், கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. குடியிருப்புவாசிகளின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
குடியிருப்பு குறித்த புகார்களை எளிதில் தெரிவிக்கும் வகையில், முதல் பிளாக் பகுதியில் உள்ள 8-ஆம் எண் வீட்டில் தற்காலிக அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. குடியிருப்புவாசிகள் தங்கள் குறைகளை 9790382387 என்ற செல்போன் எண்ணில் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். 
கட்டுமான பணிகளில் குறைபாடுகள் உள்ளதாக கருதப்படும் அனைத்து வீடுகளும் முழுமையாக சரி செய்து கொடுக்க பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து குறைகளும் முழுமையாக நிவர்த்தி செய்தபிறகே கட்டிட ஒப்பந்ததாரருக்கான நிலுவைத்தொகை விடுவிக்கப்படும், என்றார்.

Next Story