உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது


உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 20 Aug 2021 8:09 PM GMT (Updated: 20 Aug 2021 8:09 PM GMT)

அரியலூரில் உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது.

அரியலூர்:

சாலையோர கடைகள்
அரியலூரில் ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள உழவர் சந்தை 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்த கீரை, காய்கறி வகைகளை கொண்டு வந்து அரியலூர் உழவர் சந்தையில் விற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூரை ஒட்டியுள்ள பெரம்பலூர் மாவட்ட பகுதிகளான ராமலிங்கபுரம், ரசுலாபுரம், சில்லக்குடி, மேத்தால், அருணகிரிமங்களம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விளை பொருட்களை கொண்டு வந்து, அரியலூர் நகரில் சாலை ஓரங்களில் வைத்து தினமும் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் மார்க்கெட் தெரு பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. வியாபாரிகள் தினமும் நகராட்சி காந்தி மார்க்கெட்டில் மொத்தமாக விற்பனை செய்யும் கடைகளில் இருந்து காய்கறிகள் வாங்கி சாலை ஓரம் விற்பனை செய்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகளை, உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்யக்கூறி அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். காலை 11 மணிக்கு மேல் உழவர் சந்தையில் இருந்து சென்றுவிடலாம் என்று கூறப்பட்டதால், முதல் நாளன்று சாலையோர கடை வியாபாரிகள் உழவர் சந்தையில் கடை வைத்தனர்.
சந்தைக்கு செல்வதில்லை
ஆனால் தற்போது யாரும் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலை ஓரங்களில் கடைகளை வைத்துள்ளனர். விவசாயிகள் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் பெரும்பாலான கடைகள் காலியாக காட்சியளிப்பதாகவும், உழவர்கள் நேரடியாக வந்து தங்கள் விளைபொருட்களை விற்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் 2 ஆயிரம் ஆண்டில் உழவர் சந்தை திறக்கப்பட்டபோது, இப்பகுதியில் குடியிருப்புகள் குறைவாக இருந்தன. ஆனால் தற்போது மின்நகர், ராஜீவ்நகர் குடியிருப்பு பகுதிகள் உள்பட சுமார் 1,500 வீடுகள் அதிகரித்துள்ளன. உழவர் சந்தை முழுமையாக செயல்பட்டால் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் எந்த பகுதியில் என்னென்ன விளை பொருட்கள் இருக்கின்றன, அவற்றை உழவர் சந்தையில் விற்க முடியுமா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து, 50 கடைகளிலும் முழுமையாக காய்கறிகள் விற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சாலையோரக் கடைகளை முழுமையாக அகற்றினால் தான் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் வந்து, வேண்டிய காய்கறிகளை வாங்குவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story