அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பெரம்பலூர்:
கோவில்களுக்கு வெளியே நின்று தரிசனம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு காட்சியளித்தன.
கோவில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றது. ஆனாலும் சில பக்தர்கள் வரலட்சுமி விரத பூஜையையொட்டி நேற்று அம்மன் கோவில்களுக்கு வந்து வெளியே நின்று அம்மனை வணங்கி சென்றதை காணமுடிந்தது.
சிறப்பு அபிஷேகம்
மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத அம்மன் கோவில்களில் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜையையொட்டி நேற்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மூலவர் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன், மகாலட்சுமி அலங்காரமும், உற்சவர் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கும் மகாலட்சுமி அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான சுமங்கலி பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுமங்கலி பெண்கள் வழிபாடு
பெரம்பலூர் ஜெய்ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதபூஜை விழா, ஆரிய வைசிய மகாஜன சங்கம் மற்றும் மகிளா சபா சார்பில் நேற்று நடந்தது. இதில் வரலட்சுமி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு அர்ச்சனை, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல் பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக சாலையில் அபிராமபுரம் மேற்கு குடியிருப்பில் உள்ள வழக்கறிஞர் இல்லம், உழவர் சந்தை எதிரில் உள்ள மாத்வபிராமணர் வீடு மற்றும் அந்தணர்கள் வீடுகளில் சிறிய அளவிலான அலங்கார மண்டபத்தை தயார் செய்து மாவிலை தோரணங்களை கட்டி, அதில் வரலட்சுமி பிரதிமையை வைத்து வண்ண மலர்களால் அலங்கரித்து, சுமங்கலி பெண்கள் தமது கைகளில் மஞ்சள் சரடு கட்டி வரலட்சுமி விரதபூஜையை நடத்தினர்.
அப்போது லட்சுமி தோத்திரங்களையும், லலிதா சகஸ்ரநாமத்தையும் பாராயணம் செய்தனர். சுமங்கலி பெண்கள் நேற்று முன்தினம் தொடங்கி வரலட்சுமி பூஜை வரை உபவாசம் கடைபிடித்தனர். பின்னர் அனைவரும் வரதலட்சுமி பிரதிமைக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் அட்சதை தூவி வழிபாடு நடத்தினர்.
Related Tags :
Next Story