5 கிலோ மீட்டர் நடந்து சென்று தலையில் களிமண் சுமந்து வரும் தொழிலாளர்கள்


5 கிலோ மீட்டர் நடந்து சென்று தலையில் களிமண் சுமந்து வரும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 21 Aug 2021 1:39 AM IST (Updated: 21 Aug 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே மண்பாண்டங்கள் செய்ய வாகனங்களில் களிமண் எடுத்துவர அனுமதி மறுப்பால், தொழிலாளர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தலையில் களிமண்ணை சுமந்து வருகின்றனர்.

மீன்சுருட்டி:

மண்பாண்ட தொழிலாளர்கள்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர், குயவன்பேட்டை ஆகிய கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 5 தலைமுறையாக மண்பாண்ட தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். இதில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மண் சட்டிகள், மண் பானைகள், அடுப்புகள், திருவிழா காலங்களில் தேவையான அகல் விளக்குகள், மண் பொம்மைகள், குதிரைகள், கலசங்கள் உள்பட பல்வேறு வகையான மண்பாண்ட பொருட்களை தயார் செய்கின்றனர்.
தற்போதைய நாகரிக வளர்ச்சியில் பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பொருட்களின் பயன்பாடு அதிகரித்தபோதும், தமிழர்களின் அடையாள சின்னங்களில் ஒன்றான மண்பாண்ட தொழிலை குலத்தொழிலாக எண்ணி இன்றளவிலும் விட்டுவிடாமல் தொழிலை மேம்படுத்தி வருகின்றனர். இவ்வாறு நம்பிக்கையுடன் வாழ்வை நடத்தி வரும் வானவநல்லூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு
அதாவது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வானவநல்லூர் கிராமம், கடலூர் மாவட்ட எல்லையின் கடைசி பகுதியையொட்டி அமைந்துள்ளது. இத்தொழிலாளர்களின் மண்பாண்ட தொழிலுக்கு ஏற்ற வகையில் மூலப்பொருளான களிமண், அவ்வூரைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் போதுமான அளவில் கிடைக்கவில்லை. அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தின் எல்லையான ஆச்சாள்புரத்தில் கொள்ளிடக் கரையையொட்டி களிமண் அதிக அளவில் கிடைக்கிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு இரு முறை ஆச்சாள்புரத்தில் தான் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுத்து வருவார்கள். இதில் கடந்தாண்டு வரை அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு வாகனத்தில் களிமண் எடுத்து வருவதற்கு மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணை வாகனத்தில் எடுத்துச்செல்ல கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாசில்தாரிடம் மனு அளித்தநிலையில், அவர் அனுமதி தர மறுத்துள்ளார். மேலும் ஆளாளுக்கு சென்று இரும்புச்சட்டியில் களிமண்ணை எடுத்து தலையில் வைத்துச்செல்லுங்கள் என்று தெரிவிக்கப்பட்டதாக, மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தாரிடம் எவ்வளவோ முறையிட்டும், அனுமதி கிடைக்கவில்லை.
தலையில் சுமந்து வருகின்றனர்
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வேறு வழியின்றி வாழ்க்கையை நடத்த வேண்டும், பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற வாழ்வாதார அழுத்தம் காரணமாக 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, கடலூர் மாவட்ட எல்லையான ஆச்சாள்புரத்தில் களிமண்ணை எடுத்து பெரிய இரும்புச்சட்டியில் வைத்து தலையில் சுமந்தபடி நடந்தே வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் பாரம்பரியமாக இந்த தொழிலை செய்து வருகிறோம். எங்களுக்கு இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் எதுவும் தெரியாது. இதற்கு முன்பு நாங்கள் மண் எடுத்துச்செல்வதில் எந்தவித சிக்கலும் இல்லை. தற்போது அனுமதி மறுக்கப்படுகிறது.நாங்கள் அடிக்கடி மண் எடுக்கப்போவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே மண் தேவைப்படும். அதை வைத்து ஒரு ஆண்டுக்கு தேவையான மண் பாண்ட பொருட்களை தயார் செய்வோம். ஆனால் இந்த ஆண்டு மண் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்ட பொருட்களை எப்படி தயார் செய்யப் போகிறோம் என்பது கவலையாக உள்ளது. வேறு வழியின்றி தலையில் மண் சுமந்து வருகிறோம். எத்தனை நாளைக்கு நாங்கள் சுமந்து வர முடியும், என்று வேதனையுடன் தெரிவித்தனர். எனவே மண்பாண்ட தொழிலாளர்கள் நலன் கருதி களிமண்ணை வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story