2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்தும் காங். முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி விடுதலையாவதில் தாமதம்
2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்தும் காங்கிரஸ் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
உப்பள்ளி:
முன்னாள் மந்திரி கைது
தார்வாரில் பா.ஜனதா பிரமுகரும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருமான யோகேஷ்கவுடா கடந்த 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தார்வார் உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு(2020) நவம்பர் மாதம் 5-ந்தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய்குல்கர்னி கைது செய்யப்பட்டு இருந்தார். அவரை, பெலகாவியில் உள்ள இண்டல்கா சிறையில் அடைத்து விசாரணை நடந்து வந்தது.
ஜாமீன்
இதில் யோகேஷ் கவுடா கொலையில் அரசியல் நோக்கம் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனாலும் சொந்த ஊரான தார்வாரில் தங்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாட்சிகளை நாசப்படுத்திய வழக்கு நிலுவையில் இருந்ததால், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு வினய் குல்கர்னி சாட்சிகளை நாசப்படுத்திய வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைதொடர்ந்து மின்னஞ்சல் மூலமாக சிறைச்சாலை நிர்வாகத்திற்கு வினய் குல்கர்னி தீர்ப்பு குறித்த நகல் அனுப்பி வைக்கப்பட்டது.
விடுதலையாவதில் தாமதம்
இந்த நிலையில் பெங்களூரு கோர்ட்டு ஜாமீன் வினய் குல்கர்னிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாலும், அவர் நேற்று சிறையில் இருந்து விடுதலை ஆகவில்லை. அதாவது, பெங்களூரு கோர்ட்டு ஜாமீன் நகலை மின்னஞ்சல் வழியாக நேற்று சிறைச்சாலை நிர்வாகத்துக்கு அனுப்பியது. ஆனால், நேற்று கர்நாடகத்தில் அரசு விடுமுறை என்பதால் கோர்ட்டு உத்தரவு நகல் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் நேற்று அவர் விடுதலை செய்யப்படவில்லை.
இன்று (சனிக்கிழமை) வினய் குல்கர்னி விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது. இன்றும் அவர் விடுதலை செய்யப்படவில்லை எனில் வருகிற 23-ந்தேதி தான் வினய் குல்கர்னி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கொலை மற்றும் சாட்சிகளை நாசப்படுத்திய வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையிலும் வினய் குல்கர்னி விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த வினய் குல்கர்னி மேலும் சில நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story