கர்நாடகத்தில் குடியிருப்புடன் கூடிய தொழிற்பேட்டை; மந்திரி முருகேஷ் நிரானி தகவல்


கர்நாடகத்தில் குடியிருப்புடன் கூடிய தொழிற்பேட்டை; மந்திரி முருகேஷ் நிரானி தகவல்
x
தினத்தந்தி 21 Aug 2021 2:51 AM IST (Updated: 21 Aug 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் குடியிருப்புடன் கூடிய தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.

பெங்களூரு:

குடியிருப்புகள் உருவாக்கப்படும்

  தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தனது துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  பணியை நோக்கி நடை என்ற திட்டத்தின் கீழ் குடியிருப்பு வசதியுடன் கூடிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். கர்நாடக தொழில் வளர்ச்சி வாரிய நிலத்தில் தொழிற்பேட்டைக்காக ஒதுக்கப்படும் நிலத்தில் 10 முதல் 15 சதவீத நிலத்தில் குடியிருப்புகள் உருவாக்கப்படும். இதனால் அந்த தொழிற்பேட்டைகளில் பணியாற்றுபவர்கள் அங்கேயே தங்கி வேலைக்கு சென்று வர முடியும்.

போக்குவரத்து நெரிசல்

  இதன் மூலம் போக்குவரத்தால் மனித நேரம் வீணாவது தடுக்கப்படும். நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும். அத்துடன் உற்பத்தியும் அதிகரிக்கும். இது ஒரு சிறப்பு திட்டம் ஆகும். அந்த குடியிருப்பு-தொழிற்பேட்டையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். அதாவது பள்ளிகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், மருத்துவ நிலையங்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை அமைக்கப்படும்.

  கோலார், ராமநகர், மண்டியா, துமகூரு, விஜயாப்புரா, ஹாவேரி மாவட்டங்களில் மொத்தம் 9,010 ஏக்கர் நிலத்தில் இத்தகைய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு 81 ஆயிரத்து 864 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  இவ்வாறு முருகஷே் நிரானி கூறினார்.

Next Story