தேவராஜ் அர்ஸ் பயன்படுத்திய கார்; விதானசவுதாவில் வலம் வந்த ‘பிளாக் பியூட்டி’


தேவராஜ் அர்ஸ் பயன்படுத்திய கார்; விதானசவுதாவில் வலம் வந்த ‘பிளாக் பியூட்டி’
x
தினத்தந்தி 21 Aug 2021 2:56 AM IST (Updated: 21 Aug 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ் பயன்படுத்திய கார் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விதானசவுதாவில் வலம் வந்தது.

பெங்களூரு:

தேவராஜ் அர்ஸ்

  கர்நாடகத்தில் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். கர்நாடகத்தில் நிர்வகித்த முக்கிய முதல்-மந்திரிகளில் இவர் முதன்மையானவராக கருதப்படுகிறார். இவர் கடந்த 1972-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்தார். இவரது வெற்றியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, வெளிநாட்டில் இருந்து ’மெர்சிடஸ் பென்ஸ்’ காரை வாங்கி அதை கர்நாடக அரசுக்கு பரிசாக அளித்தார்.

  அதன்பின்னர் சுமார் 10 ஆண்டு காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த தேவராஜ் அர்ஸ், இந்திரா காந்தி வழங்கிய அந்த மெர்சிடஸ் பென்ஸ் காரில் வலம் வந்தார். கருப்பு நிறம் கொண்ட அந்த கார் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அந்த காரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

பிளாக் பியூட்டி

  கர்நாடகத்தில் அந்த கார் மக்களால் ‘பிளாக் பியூட்டி’ என்று அழைக்கப்பட்டது. அந்த காரை தேவராஜ் அர்ஸ் பயன்படுத்தியதால் அதற்கு மவுசு மேலும் கூடியது. தேவராஜ் அர்சின் மறைவுக்கு பிறகு அந்த கார் ஏலம் விடப்பட்டது. அதை ஜி.எம்.பாபு என்பவர் விலைக்கு வாங்கி பாதுகாத்து
வந்தார். இந்த நிலையில் நேற்று தேவராஜ் அர்சின் 106-வது பிறந்தநாள் விழா பெங்களூரு விதான சவுதாவில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் பயன்படுத்திய அந்த கார் விதான சவுதாவுக்கு வரவழைக்கப்பட்டது.

  நேற்று காலையில் அந்த கார் விதான சவுதாவுக்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து அந்த காரை வரவேற்றனர். மேலும் ஏராளமானோர் அந்த காரை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பலர் அந்த காரின் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அந்த கார் விதானசவுதா வளாகத்தில் வலம் வந்தது.

சித்தராமையா வலம் வந்தார்

  அந்த கார் இன்னும் நல்ல நிலையில் இருப்பதாகவும், இதற்கு முன்பு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா அந்த காரில் ஒருமுறை வலம் வந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 48 வருடங்கள் கழித்தும் இன்றளவும் அந்த கார் அதே அழகுடன் இருப்பதாக பலர் கூறினர்.

Next Story