எளிய முறையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்


எளிய முறையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2021 8:33 PM IST (Updated: 21 Aug 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு காரணமாக பொள்ளாச்சியில் ஓணம் பண்டிகை எளிய முறையில் கேரள மக்கள் கொண்டாடினார்கள்.

பொள்ளாச்சி

கொரோனா பாதிப்பு காரணமாக பொள்ளாச்சியில் ஓணம் பண்டிகை எளிய முறையில் கேரள மக்கள் கொண்டாடினார்கள். 

ஓணம் பண்டிகை

கேரளாவை ஆட்சி செய்த மாவேலி மன்னர் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் நாட்டை காண வருகிறார் என்பது ஜதீகம். அவரை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க திருவிழா ஓணம் பண்டிகை. உலகம் முழுவதும் வசிக்கும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ஓணத்தையொட்டி வீட்டில் விருந்து தயார் செய்து உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினருக்கு கொடுப்பார்கள். மேலும் வீட்டின் முன் பல்வேறு வகையான வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். கேரளாவில் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே களைகட்ட தொடங்கிவிடும். இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அத்தப்பூ கோலம்

இதையொட்டி வீடுகள் முன் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கில் அமலில் உள்ளதால்  ஓணம் பண்டிகையை கேரள மக்கள் எளிய முறையிலேயே கொண்டாடினர். இதனால் பொள்ளாச்சி பகுதியில் ஓணம் பண்டிகை களை கட்டவில்லை. 

ஊரடங்கு காரணமாக அய்யப்பன் கோவில் மூடப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று அய்யப்பனை தரிசித்து சென்றனர்.
இதுகுறித்து பொள்ளாச்சியில் வசிக்கும் மலையாள மக்கள் கூறியதாவது:-

பூக்கள் விலை அதிகம்

ஆண்டுதோறும் ஓணத்திற்கு வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்து, பண்டிகையை கொண்டாடுவோம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக யாரையும் வீட்டிற்கு அழைக்கவில்லை. மேலும் இங்கிருந்து கேரளாவுக்கும் செல்ல முடியவில்லை. 

மேலும் மாலை 5 மணிக்கு கடைகள் மூடப்பட்டதால் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக வீடுகளில் பெரிய அளவில் பூக்கோலம் போடுவார்கள். இந்த ஆண்டு கொரோனா காரணமாக மக்களிடையே பணபுழக்கம் குறைந்து விட்டது.

 இதற்கிடையில் பூக்கள் வரத்து குறைவு காரணமாக விலை அதிகமாக இருந்ததால் குறைந்த அளவே பூக்களை வாங்கி கோலம் போட்டனர். கொரோனா பாதிப்பு, ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story