உளுந்தூர்பேட்டையில் மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் வியாபாரி உள்பட 2 பேர் கைது
உளுந்தூர்பேட்டையில் மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை,
வாகன சோதனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை விருத்தாசலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தியதில், 26 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார், மினிலாரியில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மினிலாரியை ஓட்டிவந்தவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சாமிதுரை என்பதும், அவருடன் வந்தவர் மினிலாரியின் உரிமையாளர் வெற்றி(வயது 45) என்பதும் தெரியவந்தது.
3 பேரிடம் விசாரணை
மேலும் அவர்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை மினிலாாி மூலம் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த புகையிலை பொருட்கள் மொத்த வியாபாரியான இஸ்மாயில்(45) என்பவருடைய குடோனுக்கு கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியை பறிமுதல் செய்த போலீசார், வெற்றி மற்றும் இஸ்மாயிலை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் சாமிதுரை உள்பட 3 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட இஸ்மாயில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story