திண்டிவனத்தில் நரிகுறவ பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.24 ஆயிரம் அபேஸ் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி மர்ம மனிதர் கைவரிசை


திண்டிவனத்தில் நரிகுறவ பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.24 ஆயிரம் அபேஸ் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி மர்ம மனிதர் கைவரிசை
x
தினத்தந்தி 21 Aug 2021 10:27 PM IST (Updated: 21 Aug 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் நரிகுறவ பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து, ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரத்தை மர்ம மனிதர் அபேஸ் செய்து சென்றுவிட்டார்.

திண்டிவனம், 

திண்டிவனம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் கமல். இவரது மனைவி சத்யா (வயது 25). நரிக்குறவர்கள் ஆவார்கள். நேற்று கணவன், மனைவி இருவரும் திண்டிவனம் நேரு வீதி மேம்பாலம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தானர்.

அப்போது அவர்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க தெரியாது என்பதால், அங்கிருந்த ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து ஆயிரம் ரூபாயை எடுத்து தரும்படி கூறி உள்ளனர்.

அதன்பேரில், அவர்களது கார்டை பயன்படுத்தி அந்த நபர் ஆயிரம் ரூபாயை எடுத்து கொடுத்துவிட்டு, இந்த வங்கியில் அதிகாரிகளை எனக்கு நன்றாக தெரியும், மாதந்தோறும் உங்களுக்கு ரூ.500-ஐ இந்த வங்கி மூலம் பெற்று தருகிறேன் என்று கூறி உள்ளார். 

இதற்கு உங்களது ஏ.டி.எம்.கார்டை கொடுங்கள் என்று கூறியுள்ளார். கார்டை பெற்றுக்கொண்டு, போலியான மற்றொரு கார்டை சத்யாவிடம் அவர் மாற்றி கொடுத்துவிட்டு, அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.

ரூ.24 ஆயிரம் அபேஸ்

சிறிது நேரத்துக்கு பின்னர் சத்யா தனது கையில் இருந்த கார்டை பார்த்த போது, அது வேறு நிறத்தில் இருந்தது. இதன் பின்னர் தான் அது, அவரது ஏ.டி.எம். கார்டு இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த அவர் வங்கி அதிகாரியிடம் கூறினார். பின்னர் அவரது வங்கி கணக்கில் பணம் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்று, அவரது வங்கி கணக்கை அதிகாரிகள் பார்த்த போது, அதில்,  சத்யாவின் வங்கி கணக்கில் இருந்த 88 ஆயிரம் ரூபாயில் 24 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து கொடுத்த போது சத்யாவின் ரகசிய குறீயிட்டு எண்ணை தெரிந்து கொண்ட அந்த நபர், சத்யாவின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்து இருப்பது தெரியவந்தது. 

கண்காணிப்பு கேமரா

இதுபற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதில் மர்ம நபரின் உருவம் பதிவாகி உள்ளதா என்று விசாரித்து வருகிறார்கள். 

மேலும், இது தொடர்பாக சத்யா அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story