கண்டமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கண்டமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Aug 2021 10:39 PM IST (Updated: 21 Aug 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம்,

கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு மனைவி திவ்யா (வயது 33). இவர் தனது சித்தி மகன் திருமணத்திற்காக கடந்த 19-ந் தேதியன்று வீட்டை பூட்டி விட்டு கூடுவாஞ்சேரிக்கு புறப்பட்டுச்சென்றார்.

 திருமணம் முடிந்து அவர் அங்கேயே தங்கி விட்டார். அவரது மாமியார் லட்சுமி நேற்று காலை, திவ்யாவின் வீட்டிற்கு சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் நகையும், வெள்ளி டம்ளர், தட்டு, கிண்ணம் என ½  கிலோ வெள்ளி பொருட்களும் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்மநபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகை, வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story