காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்


காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Aug 2021 10:46 PM IST (Updated: 21 Aug 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காளி-மணல்மேடு சாலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை:
வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காளி-மணல்மேடு சாலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல் 
மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்படி சரிவர பணி வழங்கப்படாதது கண்டித்து அந்த திட்ட பணியாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாட்கள் கூலி வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் இது 150 நாட்களாக உயர்த்தி வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் காளி ஊராட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தொழிலாளிகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
மாதத்தில் ஒரு வாரத்திற்கு கூட வேலை வழங்கப்படுவது இல்லை. இதனால் கூலித்தொழிலாளர்கள் வருமானம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தரமற்ற அரிசி ரேஷனில் வழங்குவதாக கூறி
காளி கிராமத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மணல்மேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் வட்ட வழங்கல் அலுவலரிடம் தொலைபேசியில் பேசினர். 
இதையடுத்து இனிவரும் காலங்களில் ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கப்படும் என வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்ததாக பொதுமக்களிடம் போலீசார் எடுத்துக் கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
ஒரே ஊராட்சியில் வெவ்வேறு பகுதிகளில் 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டங்களால் காளி- மணல்மேடு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story