மானை வேட்டையாடிய சிறுத்தைப்புலி


மானை வேட்டையாடிய சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 21 Aug 2021 10:51 PM IST (Updated: 21 Aug 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே மானை வேட்டையாடிய சிறுத்தைப்புலி, அதன் உடலை மரத்தில் வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் போன்ற வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேமுண்டி பகுதியில் 2 புலிகள் உலா வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலா பகுதியில் உள்ள ஒரு மரத்தில் இறந்த மானின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. மானை வேட்டையாடிய புலி அதன் உடலை மரத்தில் வைத்து சென்று உள்ளதாக பொதுமக்கள் கூறினர். இதனால் அப்பகுதியில் பீதியும், பரபரப்பும் நிலவியது.

இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது மானை வேட்டையாடி மரத்தில் கொண்டு வந்து வைத்தது சிறுத்தைப்புலி என்பது தெரியவந்தது. பின்னர் மிகவும் அழுகிய நிலையில் இருந்த மானின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். 

இதுகுறித்து வனச்சரகர் கணேசன் கூறியதாவது:- அந்த இடத்தில் புலி நடமாட்டம் கிடையாது. மானை வேட்டையாடி சிறுத்தைப்புலிதான் மரத்தில் வைத்துள்ளது. புலி மரத்தில் ஏறுவது இல்லை. சிறுத்தைப்புலி சர்வசாதாரணமாக வேட்டையாடிய விலங்குகளின் உடலை தூக்கி மரத்தில் வைப்பது வழக்கம். 

சில நாட்களுக்கு முன்பு வேட்டையாடிய மானின் உடல் என்பதாலும், அழுகி இருந்ததாலும் அதை கைப்பற்றி உடனடியாக நிலத்தில் புதைத்து விட்டோம். மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் வெளியே நடமாட வேண்டும்.  இவர் அவர் கூறினார்.

இதேபோன்று கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-1) பத்துலைன்ஸ் பகுதியில் ராஜேந்திரன், மகாலிங்கம் ஆகியோரது வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. மேலும் செந்தில் என்பவரது ஆட்டை கொன்று அட்டகாசம் செய்தது. இதனால் அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story