நகைக்கடை அதிபர், மனைவியை தாக்கி 10 பவுன் நகை கொள்ளை


நகைக்கடை அதிபர், மனைவியை தாக்கி 10 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 22 Aug 2021 12:01 AM IST (Updated: 22 Aug 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

நகைக்கடை அதிபர், மனைவியை தாக்கி 10 பவுன் நகை கொள்ளை

இடிகரை

கோவை அருகே நகைக்கடை அதிபர் மற்றும் அவருடைய மனைவி யை தாக்கி 10 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதில் பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது 

நகைக்கடை அதிபர்

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் வண்ணான்கோவில் பிரிவு ராஜ்நகர் குடியிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது74). இவர்  தனது மனைவி காளியம்மாளுடன் (68) வசித்து வருகிறார். 

சீனிவாசன், பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். 

இவர், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு 7.30 மணியளவில் அவருடைய வீட்டின் கதவு திறந்திருந்தது.

 அப்போது மர்ம ஆசாமிகள் 4 பேர் திடீரென்று வீட்டிற்குள் புகுந்தனர். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இரும்புக்கம்பியால் தாக்குதல்

பின்னர் அந்த மர்ம ஆசாமிகள், சீனிவாசன், அவரது மனைவி காளியம்மாள் ஆகியோரை இரும்புக்கம்பியால் தாக்கினர். இதனால் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறித்துடித்தபடி சரிந்தனர்.

உடனே காளியம்மாள் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் 7 பவுன் தங்கசங்கிலி மற்றும் இடது கையில் அணிந்திருந்த 11 கிராம் தங்க வளையல் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் பறித்தனர்.

இதற்கிடையே சீனிவாசன் தம்பதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மர்ம ஆசாமிகள் காளியம்மாள் அணிந்திருந்த தங்க வளையலை பறிக்காமல் தப்பி ஓடினர்.

வாலிபர் பிடிபட்டார்

இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் சீனிவாசன் தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

 இதையடுத்து பொதுமக்கள் தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை துரத்தி சென்றனர். இதில் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒரு வாலிபரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.


இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்ட விசாரணை நடத்தினர். 

கூட்டாளிகள் யார்?

பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரித்த போது அவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல்நத்தத்தை சேர்ந்த கருணாக ரன் என்பவரின் மகன் பிரபாகரன் (28) என்பது தெரியவந்தது. 

அவருடன் வந்த கூட்டாளிகள் 3 பேர் யார்?. அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?, கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மர்ம ஆசாமிகள் தாக்கியதில் காயம் அடைந்த சீனிவாசன், காளியம்மாள் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


Next Story