17 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1,100 பேர் மீது வழக்கு


17 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1,100 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Aug 2021 12:02 AM IST (Updated: 22 Aug 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஒண்டிவீரன் சிலைக்கு கொரோனா விதிகளை மீறி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 17 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1,100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நெல்லை:
நெல்லையில் ஒண்டிவீரன் சிலைக்கு  கொரோனா விதிகளை மீறி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 17 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1,100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நினைவு தினம் 

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், பிற கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. எனினும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1,100 பேர் மீது வழக்கு

இதையடுத்து கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக, 17 அரசியல் கட்சியினர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி பா.ஜனதாவில் மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 95 பேர் மீதும், அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்டவர்கள் மீதும், காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அ.ம.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள், ஆதி தமிழர் கட்சி உள்பட மொத்தம் 17 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1,100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

Next Story