நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்
நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர்,
நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று விருதுநகரில் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் குருசாமி சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
சங்க பொருளாளர் ராஜ முனியாண்டி வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கவுரவ பொதுச்செயலாளர் மாரிமுத்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளபடி 1.7.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு விதிகளில் இடம் இருந்தும் தகுதியுள்ள உதவியாளர்களுக்கு இளநிலை, தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் திறன்மிகு உதவியாளர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிட வரிசையில் சேர்த்து நிரந்தர தலைப்பில் ஊதியம் வழங்கிட வேண்டும். காலியாக உள்ள திறன்மிகு உதவியாளர் நிலை 2 பணியிடத்தினை அரசாணைப்படி 75 சதவீதம் நேரடியாகவும், 25 சதவீதம் பதவி உயர்வு முறையிலும் நியமிக்கப்பட வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலைத்துறையில் வட்ட அளவிலான ஊழியர்களின் காலாண்டு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படாத நிலையில் இக்கூட்டங்களை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
நெடுஞ்சாலை துறையில் அரசு உத்தரவுப்படி இளநிலை பொறியாளர் 212 பணியிடங்களை உறுதிப்படுத்தி தகுதி வாய்ந்தவர்களை இளநிலை பொறியாளர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றாமல் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் தலைமை நடவடிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் வருகிற அக்டோபர் மாதம் 21-ந் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
Related Tags :
Next Story