நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 1.16 கோடியாக அதிகரிப்பு-பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 1.16 கோடியாக அதிகரித்து உள்ளதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நாமக்கல்:
4½ கோடி முட்டைகள் உற்பத்தி
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த முட்டைகள் கேரளாவுக்கு 90 லட்சமும், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு 50 லட்சமும், வெளிநாடுகளுக்கு 40 லட்சமும் என அனுப்பப்பட்டு வந்தன. இதர முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
இதே நடைமுறை நீடித்து வந்தபோதும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முட்டையின் அளவு நாளுக்கு நாள் சரிவடைந்து வந்தது. தற்போது இது சற்று உயர்ந்து உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 2015-ம் ஆண்டு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 2 கோடியே 99 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு உள்ளன.
அது கடந்த 2016-ம் ஆண்டு 2 கோடியே 48 லட்சமாகவும், 2017-ம் ஆண்டு 2 கோடியே 32 லட்சமாகவும், 2018-ம் ஆண்டு 2 கோடியே 18 லட்சம் ஆகவும், 2019-ம் ஆண்டு 1 கோடியே 44 லட்சமாகவும், கடந்த ஆண்டு 80 லட்சமாகவும் குறைந்தது.
1.16 கோடி முட்டைகள்
இந்த ஆண்டில் கடந்த மார்ச் மாதம் 1 கோடியே 51 லட்சம் முட்டைகளும், ஏப்ரல் மாதம் 1 கோடியே 41 லட்சம் முட்டைகளும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் கடந்த மே மாதம் 69 லட்சம் முட்டைகளும், ஜூன் மாதம் 66 லட்சம் முட்டைகளும் மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது கடந்த மாதம் (ஜூலை) 1 கோடியே 16 லட்சமாக உயர்ந்தது. அதாவது ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது கடந்த மாதம் 50 லட்சம் முட்டைகள் கூடுதலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story