கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; போலீஸ்காரர் பலி


கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 22 Aug 2021 12:17 AM IST (Updated: 22 Aug 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.

புளியங்குடி:
புளியங்குடியில் கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.

ஆயுதப்படை போலீஸ்காரர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தர்மர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). இவர் புதுடெல்லி மத்திய ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் முருகேசன் இலஞ்சியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வாசுதேவநல்லூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பலி

புளியங்குடியை அடுத்துள்ள சிந்தாமணி அருகே சென்றபோது, சிவகிரியில் இருந்து புளியங்குடி நோக்கி சிவகிரியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் வெங்கடேஷ் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முருகேசன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரைக் காப்பாற்றி சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த வெங்கடேசை கைது செய்தனர். இறந்த முருகேசனுக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மற்றொரு சம்பவம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை சூரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (45). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாலை தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே செவல்குளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் சூரங்குடிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். 

உமையத்தலைவன்பட்டி அருகே சென்ற போது திருவேங்கடத்தில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளத்தை சேர்ந்த சண்முகராஜ் (31) என்பவர் படுகாயம் அடைந்தர்.

இதுகுறித்து அந்த பகுதியில் சென்றவர்கள் திருவேங்கடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகவடிவு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த சண்முகராஜை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story