மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடி தஞ்சம்


மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 22 Aug 2021 12:23 AM IST (Updated: 22 Aug 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

கரூர்,
காதல் ஜோடி தஞ்சம்
கரூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் புதிதாக திருமணம் செய்து கொண்ட 3 காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து மகளிர் போலீசார் அந்த ஜோடிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் அதில் ஒரு ஜோடி திருச்சி மாவட்டம் பெட்டவாய்தலை பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர்.
விசாரணை
இந்தநிலையில் அவர்களை காணவில்லை என்று அவர்களது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஜோடியை பெட்டவாய்தலை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 
இதனை தொடர்ந்து மற்ற 2 ஜோடிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த ஜோடிகளின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து போலீஸ் நிலையம் வரவழைத்தனர். 
பெற்றோர் ஏற்க மறுப்பு
அங்கு வந்த புதுமண தம்பதிகளின் பெற்றோர் ஒரு ஜோடியினரை ஏற்றுக்கொண்டு அழைத்து சென்றனர். மற்றொரு ஜோடியினரின் பெற்றோர் அவர்களை ஏற்க மறுப்பு தெரிவித்ததால் அந்த ஜோடி தனியாக அனுப்பி வைத்தனர். 
கரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் போலீஸ் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.


Next Story