அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி; மற்றொருவர் காயம்


அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி; மற்றொருவர் காயம்
x
தினத்தந்தி 22 Aug 2021 12:31 AM IST (Updated: 22 Aug 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலியானார். மற்றொரு மூதாட்டி காயமடைந்தார்.

அறந்தாங்கி:
மின்னல் தாக்கி மூதாட்டி பலி 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டை அக்ரஹார குடியிருப்பை சேர்ந்தவர் ஜோதி (வயது 60). இவர் தனது வீட்டில் வளர்க்கும் மாடுகளை மேய்ப்பதற்காக நேற்று ரெத்தினகோட்டை கண்மாய் பகுதிக்கு சென்று உள்ளார். இவருடன் வீட்டின் அருகே இருக்கும் லலிதாவும் (70) சென்றார். அப்போது இடியுடன் மழை பெய்தது. இதனால் ஜோதியும், லலிதாவும் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கினர். 
அப்போது பலத்த இடி சத்தத்துடன் மின்னல் மரத்தில் விழுந்துள்ளது. இதில் ஜோதியும், லலிதாவும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜோதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். லலிதா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 
சாலை மறியல் 
இதையடுத்து ஜோதியின் உடல் பிரேத பரிசோதனை நாளை நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு ஜோதியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனை முன் அறந்தாங்கி-பட்டுகோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஜோதியின் உடல் இன்றே பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் மருத்துவர்கள் ஜோதியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அறந்தாங்கி-பட்டுகோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story