தைல மரங்களுக்கு இடையே பள்ளங்களை ஆழப்படுத்த சென்ற வனத்துறை டிராக்டர்களை சிறைபிடித்த இளைஞர்கள்


தைல மரங்களுக்கு இடையே பள்ளங்களை ஆழப்படுத்த சென்ற  வனத்துறை டிராக்டர்களை சிறைபிடித்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 22 Aug 2021 12:34 AM IST (Updated: 22 Aug 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

தைல மரங்களுக்கு இடையே பள்ளங்களை ஆழப்படுத்த சென்ற வனத்துறை டிராக்டர்களை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

அரிமளம்:
தைல மரங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி பகுதியை சுற்றிலும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தைல மரங்கள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பல்லுயிர்கள் வாழும் சமூக காடுகளாக இருந்த இப்பகுதியை வனத்தோட்டக்கழகம் குத்தகை அடிப்படையில் தைல மரங்களை பயிரிட தொடங்கியது. 
இந்த மரங்களினால் ஏற்பட்ட விளைவுகளை காலம் கடந்தே இப்பகுதி மக்கள் உணர தொடங்கினர். இதனால் கடும் வெப்பம், மழை பொழிவு குறைதல், விலங்குகள் உணவின்றி அழிந்து போனது. பறவைகள் கூடு கட்டாத நிலை என பல்வேறு சூழியல் தாக்கத்தை இப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 
குறுக்கு வரிசையில் பள்ளம் 
இந்த தைல மரங்களுக்கு இடையே ஆண்டுக்கு ஒரு முறை 2 அடி ஆழத்திற்கு உழவு செய்து நீண்ட மற்றும் குறுக்கு வரிசையில் பள்ளம் ஏற்படுத்தி வனத்துக்குள் பெய்யும் மழை நீரை வெளியேறாதவாறு செய்து விடுகின்றனர்.
அரிமளம் பகுதி விவசாய கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் வனத்துக்குள் (காட்டுக்குள்) பெய்யும் மழை நீரை நம்பியே இருக்கின்றன. மழை நீர் வெளியேறாத வகையில் அணை அமைத்ததால் அரிமளம் பகுதி குளம் மற்றும் விவசாய கண்மாய்கள் நீரின்றி கடந்த பல ஆண்டுகளாக வறண்டு காணப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர், வனத்துறை, வனத்தோட்டக்கழகம் என பல முறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
டிராக்டர்கள் சிறைபிடிப்பு 
இந்நிலையில், நேற்று அரிமளம் வனப்பகுதியில் தைல மரங்களுக்கு இடையே பள்ளங்களை ஆழப்படுத்த வந்த 4 டிராக்டர்களை பொதுமக்கள் சிறைபடித்தனர். பின்னர் டிராக்டர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். மழையை நம்பி காத்திருக்கும் இப்பகுதி மக்களின் உணர்வுகளை மதிக்காத வனத்துறையின் செயல்களை எதிர்த்து மிகப்பெரும் போராட்டம் ஒன்றை இப்பகுதி பொதுமக்கள் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Next Story