வேலாயுதம்பாளையம்- புன்னம்சத்திரம் சாலையில் ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு


வேலாயுதம்பாளையம்- புன்னம்சத்திரம் சாலையில் ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2021 7:09 PM GMT (Updated: 21 Aug 2021 7:09 PM GMT)

வேலாயுதம்பாளையம்- புன்னம் சத்திரம் சாலையில் ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் சீரமைத்தனர்.

நொய்யல்,
சாலையில் ஆயில் கொட்டியது
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்திலிருந்து புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள ஆதிக்காபள்ளம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயிலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது டேங்கரில் துவாரம் ஏற்பட்டு அதிலிருந்து ஆயில் கசிந்து சுமார் 200 அடி வரை தார் சாலை நெடுகிலும் கொட்டியது.
கீழே விழுந்த தொழிலாளர்கள்
இந்தநிலையில் அதிகாலை முதல் மழை பெய்ததால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், புன்னம்சத்திரம் பகுதி, காகித ஆலை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து வேலாயுதம்பாளையம், பரமத்திவேலூர் பகுதிக்கு சென்ற தொழிலாளர்களும் தார் சாலையில் நெடுகிலும் ஆயில் கொட்டி இருந்ததால் அந்தப்பகுதியில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காகித ஆலை பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு பகுதிகளிலும் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.
சாலை சீரமைப்பு
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக மரத்தூள் மற்றும் மணல் ஆகியவை வரவழைக்கப்பட்டது. பின்னர் தார் சாலையில் ஆயில்கொட்டி கிடக்கும் இடம் நெடுகிலும் மரத்தூள் மற்றும் மணலை கொட்டி தார் சாலை முழுவதும் பரப்பினர். இதனால் ஆயில் முழுவதையும் மரத்தூள் உறிஞ்சிகொண்டதால் சிறிது நேரம் கழித்து தீயணைப்பு வீரர்கள் தார் சாலையை சீரமைத்தனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறையினரையும், பேரூராட்சி நிர்வாகத்தையும் வெகுவாக பாராட்டினர்.

Next Story