பூட்டிக் கிடக்கும் தென்னை வணிக வளாகத்தை மீண்டும் இயக்க நடவடிக்கை
பட்டுக்கோட்டையில், 10 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட்ட தென்னை வணிக வளாகத்தை மீண்டும் இயக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில், 10 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட்ட தென்னை வணிக வளாகத்தை மீண்டும் இயக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தென்னை வணிக வளாகம்
பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை ஊராட்சியை சேர்ந்த தச்சனோடையில் 20.3 ஏக்கர் நிலம் தென்னை வணிக வளாகம் அமைக்க கையகப்படுத்தப்பட்டு அந்த இடத்தில் வேளாண் துறை கட்டுப்பாட்டில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் அமைக்கப்பட்டது.
நவீன வசதிகளுடன் கூடிய சேமிப்பு கிடங்கு, கொப்பரை தரம் பிரிக்கும் ஷெட், எண்ணெய் பிழியும் ஆலை, சூரிய ஒளி களம், ஏலஅரங்கம் 18 வகையான மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற் கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளும் ரூ.8 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது.
10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது
கடந்த 27.2.2011-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி கோட்டையில் இருந்து காணொலி காட்சி மூலம் தென்னை வணிக வளாகத்தை திறந்து வைத்தார். ஆனால் சில நாட்களிலேயே தென்னை வணிக வளாகம் செயல்படவில்லை. அதன்பிறகு 12.7.2015-ந் தேதி அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை வணிக வளாகத்தை பார்வையிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த தென்னை வணிக வளாகம் பூட்டியே கிடக்கிறது.
தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வேளாண் பட்ஜெட்டில், பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டல மையம் அமைக்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் மூடப்பட்டு கிடந்த தென்னை வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது அங்குள்ள கட்டிடம் எந்திரங்கள் என்ன நிலையில் உள்ளது?. அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியுமா? என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏக்கள் அண்ணாதுரை(பட்டுக்கோட்டை), அசோக்குமார்(பேராவூரணி) தஞ்சை விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, வேளாண் துணை இயக்குனர் மரியாரவி, பொன்னவராயன்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் வீரசேனன், அப்துல் மஜீது மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story