சிவன் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
சிவன் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நேற்று ஆவணி மாத சதுர்த்தசியை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வழக்கமாக நடராஜப் பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு நாட்கள் மட்டுமே சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி மாதம் வரும் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதற்கு அடுத்து ஆவணி மாதம் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
அதன்படி விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு நேற்று மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜப் பெருமான் சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நடராஜர் வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்தனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story