வருகிற டிசம்பர் மாதம் பெலகாவி சுவர்ணசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர்; பசவராஜ் பொம்மை பேட்டி
பெலகாவி சுவர்ணசவுதாவில் வருகிற டிசம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
விஜயாப்புரா:
அணைக்கு பூஜை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று விஜயாப்புரா, பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக பெங்களூருவில் இருந்து அவர் விஜயாப்புராவுக்கு சென்றார். விஜயாப்புராவில் உள்ள அலமட்டி அணை நிரம்பி இருப்பதை தொடர்ந்து, அங்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பாகினா பூஜை செய்தார். இதில், நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்கோள் கலந்து கொண்டார்.
பின்னர் விஜயாப்புராவில் இருந்து பெலகாவிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புறப்பட்டு சென்றார். பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதா முன்பு திரண்டு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். கரும்புக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பசவராஜ் பொம்மை உறுதி அளித்தார்.
பசவராஜ் பொம்மை ஆலோசனை
அதைத்தொடர்ந்து, சுவர்ண சவுதாவில் வைத்து பெலகாவி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு
வருவதற்காக எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-மந்திரி
பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தர
விட்டார்.
பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
குளிர்கால கூட்டத்தொடர்
பெலகாவி சுவர்ண சவுதாவை ஆட்சி அதிகாரத்திற்கு பயன்படுத்தி கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக சர்க்கரைத்துறை அலுவலகம் பெங்களூருவில் இருந்து சுவர்ண சவுதாவுக்கு மாற்றப்படும். பெலகாவியில் கரும்பு விவசாயிகள் அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை ஆலைகள் இருப்பதாலும், அந்த துறை இங்கு மாற்றப்பட இருக்கிறது. இதுதவிர மேலும் சில துறைகளின் அலுவலகமும் சுவர்ணசவுதாவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூருவுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். வருகிற டிசம்பர் மாதம் பெலகாவி சுவர்ணசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
40 ஆயிரம் தடுப்பூசி
கொரோனா 3-வது அலை உருவாகாமல் தடுக்க அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைளையும் எடுத்து வருகிறது. கேரளா, மராட்டிய மாநிலங்களுக்கு அருகே அமைந்துள்ள கர்நாடக எல்லைப்புற மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். எல்லைப்புற மாவட்டங்களுக்கு சென்று பரிசீலனை நடத்த முடிவு செய்துள்ளேன். பெலகாவி மிகப்பெரிய மாவட்டம் ஆகும். அந்த மாவட்டத்தில் புதிதாக 5 தாலுகா ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெலகாவி மாவட்டத்திற்கு தினமும் 15 ஆயிரம் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசிடம் கர்நாடகத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை அடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா பரிசோதனை மையம்
கொரோனா 3-வது அலையின் போது குழந்தைகள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்காக தனியாக சிகிச்சை மையம் திறக்கப்படும். கிராமங்களில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகளை கண்டறிந்து, அந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். பெலகாவியில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் திறக்கவும், சிக்கோடியில் கொரோனா பரிசோதனை மையம் திறக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
பெலகாவியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை, வெள்ள பாதிப்பு, கொரோனா விவகாரம் குறித்து குறைந்த நேரமே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதனால் சில எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு வரவில்லை. லட்சுமண் சவதி ஏற்கனவே என்னுடன் தொடர்பு கொண்டு பேசி இருந்தார். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அனைத்து கூட்டத்திலும் தகுந்த நேரத்தில் பங்கேற்பது சாத்தியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story