வீட்டின் அருகே பிணமாக கிடந்த ஆண் குழந்தை
ஆதிச்சனூரில் வீட்டின் அருகே ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. அந்த குழந்தை கொன்று வீசப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடையார்பாளையம்:
ஆண் குழந்தை உடல்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய். விவசாயி. இவர் நேற்று தனது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரது வீட்டின் அருகே, 5 மாத ஆண் குழந்தையின் உடல் வெள்ளைத்துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. ஆண் குழந்தையின் பிணத்தை கண்டு விஜய் அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அறிந்த மணகெதி கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரபிரசாத், இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொன்று வீசப்பட்டதா?
மேலும் இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிந்து, அந்த குழந்தை யாருடையது? யாரேனும் அந்த குழந்தையை கொன்று உடலை அப்பகுதியில் வீசிச்சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வீட்டின் அருகே இறந்த நிலையில் ஆண் குழந்தை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story