ஜமீர் அகமதுகானுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீசு


ஜமீர் அகமதுகானுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீசு
x
தினத்தந்தி 21 Aug 2021 10:32 PM (Updated: 21 Aug 2021 10:32 PM)
t-max-icont-min-icon

சொகுசு வீடுகளில் சோதனை நடத்தியதை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி ஜமீர் அகமதுகானுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

பெங்களூரு:

ஜமீர் அகமதுகானுக்கு நோட்டீசு

  பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஜமீர் அகமதுகான். இவருக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி இருந்தார்கள். நகைக்கடை அதிபர் மன்சூர்கான் ரூ.3 ஆயிரம் கோடி மோசடி செய்ததில் ஜமீர் அகமதுகானுக்கு தொடர்பு இருப்பதால், அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

  அதே நேரத்தில் பம்பு பஜார் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் அவர் கட்டியுள்ள வீட்டு விவகாரம் காரணமாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக ஜமீர் அகமதுகான் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், ஜமீர் அகமதுகான் வீட்டில் சோதனை நடத்திய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர்.

டெல்லி சென்றார்

  இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சதாசிவநகரில் உள்ள காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு ஜமீர் அகமதுகான் சென்றார். அங்கு அவர், டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசினார். அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்திருப்பதால், அந்த விவகாரம் குறித்து 2 பேரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் சில அறிவுரைகளை ஜமீர் அகமதுகானுக்கு வழங்கியதாக தெரிகிறது.

  இந்த நிலையில், பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலையில் ஜமீர் அகமதுகான் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் கூறுகையில், அமலாக்கத்துறையிடம் இருந்து எனக்கு எந்தவிதமான நோட்டீசும் வரவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

யாருக்கும் பயப்பட மாட்டேன்

  இதற்கிடையில், டெல்லி செல்லும் முன்பாக ஜமீர் அகமதுகான் தனது டுவிட்டரில், நாட்டின் பிரபல முஸ்லிம் தலைவரை டார்கட் செய்துள்ளனர். நான் வீடு கட்டி இருப்பதை பெரிய பிரச்சினையாக பேசுகிறார்கள். நான் அரசியலில் இருக்கும் வரை, எனது மக்கள் தலைகுனியும் படியான எந்த விதமான செயல்களிலும் ஈடுபட மாட்டேன்.

  நான் எந்த தவறும் செய்யவில்லை. யாருக்கும் பயப்பட மாட்டேன். அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொள்வேன். அவர்களுக்கு உரிய பதில் அளிப்பேன், என்று பதிவிட்டுள்ளார்.

Next Story