அதிகாரிகள் ஆய்வு: விதிகளை மீறிய 3 ஓட்டல்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை ஓட்டல்களில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, விதிகளை மீறிய 3 ஓட்டல்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை,
தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், கடந்த சில வாரங்களாக ஓட்டல்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்தவகையில் ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுகாதாரமான முறையில் உணவுப்பொருட்கள் கையாளப்படுகின்றனவா எனவும், பதப்படுத்திய உணவுகளின் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மண்டல நல அலுவலரின் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள், ஓட்டல்களில் உள்ள உணவுப்பொருட்கள், மளிகைப்பொருட்கள், பால், காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்களுக்கான சேமிப்பு வசதிகள், மூலப்பொருட்களை சேமிக்கும் இடங்கள், குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் உட்பட பல்வேறு வகையான உணவு சேமிப்பு முறைகள், உணவு சமைக்கும் இடங்கள் மற்றும் பாத்திரங்களை தூய்மையாக பராமரிப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றன.
அதேபோல் ஓட்டல்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமையலறை புகைபோக்கி, மேல்நிலைத்தொட்டி, கழிவறை மற்றும் கழிவுநீரகற்றும் வசதி முறையாக உள்ளனவா எனவும் மருத்துவ குழவினரால் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த 19-ந் தேதி அனைத்து மண்டலங்களில் உள்ள 45 பகுதிகள் அடங்கிய 155 ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின்போது 61 ஓட்டல்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு முறைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஓட்டல்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்புக்கு முறையான வழிமுறைகளை பின்பற்றுமாறு ஓட்டல் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 ஓட்டல்களில் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் 16 கிலோ எடையுள்ள ஆரோக்கியமற்ற உணவு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பொது சுகாதார சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. பெருமளவு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 3 ஓட்டல்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல்களிடம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story