3-டி பிரிண்டிங் முறையில் உருவாக்கம்: சிம்ஸ் ஆஸ்பத்திரியில் அதிநவீன தாடை மாற்று அறுவை சிகிச்சை
சென்னை சிம்ஸ் ஆஸ்பத்திரியில் அதிநவீன தாடை மாற்று அறுவை சிகிச்சை 2 பேருக்கு வெற்றிகரமாக நடந்துள்ளது.
சென்னை,
சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் ஆஸ்பத்திரியில் 2 நோயாளிகளுக்கு அதிநவீன தாடை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதுகுறித்து எஸ்.ஆர்.எம். குழும தலைவர் ரவி பச்சமுத்து, சிம்ஸ் ஆஸ்பத்திரி துணைத்தலைவர் டாக்டர் ராஜூ சிவசாமி, மண்டைஓடு-முக அழகியல் சீரமைப்பு பிரிவு இயக்குனர் டாக்டர் கே.ஸ்ரீதர் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது டாக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
முகத்தின் ஒரு பகுதியான தாடை எலும்புகளை நவீன தொழில்நுட்பத்தின்படி மிக துல்லியமாக உருவாக்கி பொருத்துவது என்பது மிக அரிதாகும். அந்தவகையில் டைட்டானியம் மற்றும் பாலி-எத்திலின் கொண்டு 3-டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்ட தாடை எலும்புகள் 2 பேருக்கு பொருத்தப்பட்டு உள்ளன. விரைவில் மற்றொரு நோயாளிக்கு இதேபோல தாடை எலும்பு பொருத்தப்பட இருக்கிறது. தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இரு நோயாளிகளும் முழுமையாக வாயை திறக்க முடிகிறது. பல ஆண்டுகள் கழித்து திட உணவு பொருட்களை சாப்பிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிம்ஸ் ஆஸ்பத்திரி துணைத்தலைவர் டாக்டர் ராஜூ சிவசாமி கூறுகையில், ‘‘நோயாளிகள் பூரண உடல்நலம் பெற உலகம் முழுவதிலும் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு புதிய தீர்வுகளை உருவாக்கி வருகிறோம். அதன்படி தாடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதுமைகளை நிகழ்த்தி வருகிறோம்’’, என்றார்.
எஸ்.ஆர்.எம். குழும தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், ‘‘அரிதான சில விஷயங்களை நிகழ்த்தி காட்டுகிற தருணம் எப்போதுமே பெருமைக்குரியது. எங்களது ஆஸ்பத்திரியின் அழகியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறை ‘வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்’ என்ற வாசகத்துக்கேற்ப செயல்பட்டு வருகிறது’’, என்றார்.
மேற்கண்ட தகவல் சிம்ஸ் ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story