குடியிருப்புகளை காலி செய்ய மறுப்பு: ராயபுரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடியிருப்புகளை காலி செய்ய மறுப்பு: ராயபுரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 Aug 2021 5:05 PM IST (Updated: 22 Aug 2021 5:05 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

சென்னை,

சென்னை தங்கசாலையை அடுத்த மூலக்கொத்தளம் அருகே உள்ள பி.பி.எம். கோவில் தெருவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி ரெயில்வேக்கு சொந்தமான இடம் எனவும், அதனை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று முன்தினம் பேசின்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், குடியிருப்புகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 30 ஆண்டு காலம் அந்த இடத்தில் வசித்து வருகிறோம். திடீரென ரெயில்வே அதிகாரிகள், இது ரெயில்வே இடம் என்றும், அதனால் உடனடியாக இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் வழங்கினர். எனவே நாங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை சந்தித்தோம். அவர் அதிகாரிகளிடம் பேசி 2 நாட்களில் நல்ல பதிலை கூறுவதாக தெரிவித்தார்.

ஆனால் இதுவரை அவர் எங்களை வந்து சந்திக்கவில்லை. அதனால் எம்.எல்.ஏ.வை சந்திக்க அவரது அலுவலகம் முன்பு காத்துருக்கிறோம். இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு நாங்கள் வசிக்கும் வீடு வேண்டும் அல்லது அந்த இடத்துக்கு மாற்று ஏற்பாடாவது அரசு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story