திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம், 6 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரி கிராமம், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 35). இவருக்கு பிரியா (32) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழரசன் தனியார் கார் கம்பெனியில் டெக்னிஷியனாக பணியாற்றி வருகிறார். கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்தே தமிழரசன் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் இவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலையில் வீட்டில் இன்டர்நெட் சிக்னல் கிடைக்கவில்லை என்பதற்காக சற்று தொலைவில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றிருந்தார். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் ரொக்கப்பணம், 6 பவுன் தங்க நகைகள், ¼ கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து தமிழரசன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story