கடலையூரில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுதினம்


கடலையூரில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுதினம்
x
தினத்தந்தி 22 Aug 2021 7:25 PM IST (Updated: 22 Aug 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

கடலையூரில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது

கோவில்பட்டி:
1942-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, கோவில்பட்டி அருகே கடலையூரில் சுதந்திர போராட்ட தியாகி வெயிலுகந்த முதலியார் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது.
இதில் ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் சங்கரலிங்க முதலியார் உயிரிழந்தார். மாடசாமி முதலியார் மற்றும் ராமசாமி முதலியார் ஆகியோர் படுகாயமடைந்தனர். நெசவு தறிகள் சூறையாடப் பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் நினைவாக கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி முன்பு 2008-ம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ந்தேதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் இந்தாண்டு நேற்று வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் நினைவாக அமைக்கப்பட்ட ஸ்தூபியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பஞ்சாயத்து தலைவர் திராவிடச்செல்வி தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியமணி, பள்ளி தலைமை ஆசிரியர் விவேகானந்தன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், தியாகிகள் நினைவு அறக்கட்டளை பொறுப்பாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story