நாகையில் சினிமா தியேட்டர்களில் தூய்மை பணி
இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் நாகையில் சினிமா தியேட்டர்களில் தூய்மை பணி நடந்தது. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் நாகையில் சினிமா தியேட்டர்களில் தூய்மை பணி நடந்தது. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஊரடங்கு நீட்டிப்பு
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் தொற்று குறைந்து வந்ததால் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அதன்படி தமிழக அரசு கொரோனா நோய் பரவலை தடுக்க தளர்வுகளுடன் 12-வது முறையாக அடுத்த மாதம் 6-ந் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதில் பள்ளி, கல்லூரிகள் அடுத்த மாதம் 1- ந்தேதி முதல் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடு பணிகள்
இது தவிர நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத ரசிகர்களுடன் இன்று(திங்கட்கிழமை) முதல் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சினிமா தியேட்டர் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை அதன் உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 12 சினிமா தியேட்டர்களில் தூய்மை பணி நடைபெற்றது. நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் கிருமி நாசினி தெளிப்பது, இருக்கைகளை சுத்தம் செய்வது, 50 சதவீத ரசிகர்கள் அனுமதி என்கிற வகையில் சீட்டில் இடைவெளி விட்டு அமர குறியீடு போடும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வந்தது.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
மின்கட்டணம்
கொரோனா ஊரடங்கு காரணமாக 12 மாதங்கள் தியேட்டர்கள் மூடியே கிடந்தன. இதற்கான குறைந்தபட்ச மின் கட்டணம் ரூ.15 ஆயிரமாக மாதந்தோறும் வசூலிக்கப்பட்டு வந்தது. எந்த வித வருமானமும், இல்லாமல் இந்த கட்டணத்தை நாங்கள் செலுத்தி வந்தோம். இது தவிர தினந்தோறும் சினிமா தியேட்டர் இருக்கைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய வேண்டியிருந்தது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து உள்ளோம்.
எனவே ஊரடங்கால் தியேட்டர்கள் மூடியிருந்த காலத்தில் மாதாமாதம் வசூல் செய்த மின் கட்டண தொகையை அரசு திரும்ப வழங்க வேண்டும். ஆண்டுதோறும் சி படிவம் புதுப்பித்தல் செய்யப்படுவதால் தியேட்டர் உரிமையாளர்கள் அழக்கழிப்பு செய்யப்பட்டு கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சி படிவம் புதுப்பிக்கும் காலத்தை 3 ஆண்டுகளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story