முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி 3-வது நாளாக தீவிரம்
முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி 3-வது நாளாக நடக்கிறது.
உத்தமபாளையம்:
மதுரை அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பரந்தாமன் மகன் ஹரிகுமார் (வயது19). இவர் கடந்த 20-ந்தேதி கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் நடந்த நண்பரின் திருமணத்துக்கு வந்து இருந்தார். பின்னர் அவர் நண்பர்களுடன் அங்குள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்பு படையினர் முல்லைப்பெரியாற்றில் ஹரிகுமாரை தேடி வந்தனர். மேலும் கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்பு வீரர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து நேற்று 3 நாளாக முல்லைப்பெரியாற்றில் ஹரிகுமாரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதனிடையே உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆற்றில் மிக வேகமாக பாய்கிறது. இதில் நீர்சுழற்சியில் சிக்கி கடந்த ஒரு மாதத்திற்குள் 4 பேர் வரை இறந்துள்ளனர். எனவே முல்லைப்பெரியாற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story