விழுப்புரம் அருகே இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
விழுப்புரம் அருகே இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ளது தளவானூர் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதிலிருந்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படும் மின்மோட்டார் அடிக்கடி பழுதடைந்ததாலும், குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் இருந்ததாலும் அந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக வேறொரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பழைய தண்ணீர் தொட்டியை பராமரிப்பு செய்யாமலும் அல்லது அதனை இடித்து அப்புறப்படுத்தாமலும் அப்படியே விட்டுவிட்டனர்.
இடிந்து விழும் அபாய நிலையில்
இதனால் அந்த நீர்த்தேக்க தொட்டி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி இருப்பதோடு மட்டுமின்றி உறுதியற்ற நிலையிலும் உள்ளது. தொட்டியின் 4 பக்க தூண்களும் வலுவிழந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. அவ்வப்போது தொட்டியின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுவதால் இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பலமான காற்று அடித்தால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி அசைகிறது என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் கூறி வருகின்றனர்.
தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் அபாயகரமான சூழலில் உள்ளது. இதன் வழியாகத்தான் அப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக கடைவீதிகளுக்கும் மற்றும் கோவில்களுக்கும் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பொதுமக்கள் தினம், தினம் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாகவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழித்துக்கொண்டு இதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story