விழுப்புரம்-கள்ளக்குறிச்சியில் 35 தியேட்டர்கள் இன்று திறப்பு


விழுப்புரம்-கள்ளக்குறிச்சியில் 35 தியேட்டர்கள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 22 Aug 2021 9:28 PM IST (Updated: 22 Aug 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து விழுப்புரம்-கள்ளக்குறிச்சியில் 35 தியேட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்த மாதம்(செப்டம்பர்) 6-ந்தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் இன்று(திங்கட்கிழமை) முதல்  50 சதவீத ரசிகர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மேலும் தியேட்டரில் ஒரு இருக்கையை விட்டு அடுத்த இருக்கையில் தான் பார்வையாளர்கள் அமர வேண்டும், அவர்கள் காட்சியின் இறுதி வரை முக கவசம் அணிந்திருக்க வேண்டும், இடைவேளையின்போது பொது பகுதிகள், கழிவறைகள் ஆகிய இடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும், ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அரங்குக்கு உள்ளேயும், கழிவறையிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

சுத்தம் செய்யும் பணி

இதனால் கடந்த 4 மாதங்களாக மூடிக்கிடந்த தியேட்டர்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், வளவனூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, அனந்தபுரம், செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 தியேட்டர்களையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 தியேட்டர்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தியேட்டரில் உள்ள பார்வையாளர்கள் அமரும் இடம், டிக்கெட் பெறும் மையம், வாகனங்கள் நிறுத்துமிடம், தின்பண்டங்கள் வாங்கும் இடம், கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 4 மாத காலத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story